புதன், 24 டிசம்பர், 2014

‘மெட்ராஸ்’ யாருடையது? - வேடியப்பன்



மெட்ராஸ்யாருடையது?
- வேடியப்பன்

அண்மையில் வெளிவந்த மெட்ராஸ்திரைப்படம் இணையம் மற்றும் ஊடகங்களில் விவாதங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தது. விளிம்பு நிலை மனிதர்களின் முன்னேற்றத்திற்கு அரசியல் பாதை சரியான தேர்வல்ல. கல்வியே சரியான பாதை என்பதை மையக்கருத்தாக வலியுறுத்தும் கமர்ஷியல் படம். இதுவொரு தலித்சினிமா என்று தலித்துகள் கொண்டாடுகிறார்கள். கவின்மலர் தன் முகநூலில் முதன் முறையாக தலித் கவிஞர்கள் மட்டுமே பாடல்களை எழுதியுள்ள படம்என்று உச்சி முகர்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித், இணை இயக்குநரும் எழுத்தாளருமான ஜே.பி.சாணக்யா, பாடலாசிரியர்கள் கபிலன், கானாபாலா, மற்றும் திரையுலகிற்கு புதுவரவாகும் கவிஞர் கு.உமாதேவி போன்ற பலரும் தலித்துகளாகவே ஒருங்கிணைந்து பங்களிப்பு செய்துள்ள படம் மெட்ராஸ்.

இன்னொரு புறம் தலித் எழுத்தாளரான தேவிபாரதி மெட்ராஸ் படத்திற்கு தமிழ் இந்துவில் எழுதிய விமர்சனம் சர்ச்சைக்கு உள்ளானது. காரணம், மெட்ராஸ் படம் தலித்துகள் பற்றியது மட்டுமல்ல. வட சென்னையின் விளிம்பு நிலை மனிதர்கள் அனைவருக்குமான படம் என்கிறார். மேலும், சில குறைகளையும் சொல்கிறார். தலித்துகள் அல்லாதவர்கள் பலர் மெட்ராஸ் படத்தை போகிற போக்கில் தூக்கி எறிந்துவிட்டு பேசுகிறார்கள். இதன்மூலம் தங்கள் காழ்ப்புணர்வையே பதிவு செய்கிறார்கள்.

உண்மையில் மெட்ராஸ் படம் தலித் படமா? இல்லையா? இந்தக் கேள்விக்கே இடமில்லாமல், ஆமாம் இதுவொரு தலித் சினிமாதான் என்று துணிந்து சொல்லக்கூடிய வகையில் ஒரு பார்வை யாளராகவே நிறைய சான்றுகளை எடுத்துக்காட்டமுடியும். அவை ஒருபுறமிருக்க, இயக்குநர் ரஞ்சித் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இதுவொரு தலித் சினிமாதான் என்று வெளிப்படையாகவே சொல்கிறார். கதாநாயகனின் வீட்டில் புத்தக அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் அம்பேத்கர் புத்தகங்கள், நாயகன் வாசித்துக் கொண்டிருக்கும் தீண்டாதவசந்தம்புத்தகம் போன்றவற்றை குறிப்பிட்டு பேசுகிறார்.

கதாநாயகி வீட்டிலும் அயோத்திதாசப் பண்டிதரின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கிறது. நாயகியின் தந்தை குடியரசுக் கட்சிக்காரராகவே வலம் வருகிறார். அவருடைய கட்சிக்கொடி நீல நிறத்திலானது. நாயகனின் உயிர் நண்பனான அன்பு முன்னேற்றம் அடைய அதிகாரத்தை அடைந்தே தீருவோம் என்று தலித்துகளின் அரசியல் தாரக மந்திரத்தையே சூளுரைக்கிறார். நண்பர்கள் கூட்டத்தினரும் அடங்கினதெல்லாம் அந்தக் காலம்என்று விழிப்புணர்வும், உந்துதலும் ஏற்படுத்தும் வசனம் பேசுகின்றனர். சுவற்றில் ப்ளூ பாய்ஸ் என்று எழுதப்பட்ட விளம்பரம், திருமாவளவனின் புகைப்பட சுவரொட்டி, கால்பந்தில் நீல நிற சீருடை என்று படம் முழுக்க நீல நிறம். நம்மாளுகஎன்று பேசும் வசனம், நாயகனும், நாயகியும் தனக்குப் பிடித்த ஹீரோவாக விக்ரமை (தலித்) குறிப்பிடுவது என்று ஏராளமான சான்றுகளை ஒரு பார்வையாளராகவே கண்டறியக்கூடிய வகையில் ஐயமேயில்லாமல் இதுவொரு தலித் சினிமாவேதான்.

தலித்துகள் என்றாலே சேரிகளில் உழலும் அவலமான, சோகமான வாழ்க்கையையே இதுவரை காட்டிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் காலத்தை மாற்றி, தலித்துகளின் கொண்டாட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் இயக்குநர். மேலும், இனிவரும் காலங்களிலும் இந்த மனிதர்களின் கொண்டாட்டமான வாழ்க்கையையே தொடர்ந்து பதிவு செய்யும்படியான படங்களை எடுப்பேன் என்று உறுதிபடக் கூறுகிறார். இயக்குநர் ரஞ்சித்துக்கும், மெட்ராஸ் படத்திற்கும் சில குறைகளை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு, நாம் நமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீல நிற ஆடை அணிந்த கதாநாயகனின் கால்பந்தாட்ட அணியிடம் தோற்கும் அணிக்கு மஞ்சள் நிற ஆடையை சீருடையாக தேர்ந்தெடுத்ததில் உள் நோக்கம் இல்லை என்று சொல்லிவிடமுடியாது.

ஒரு குழந்தையோட நிறுத்திடாதே. ரெண்டு, மூனு பெத்துப்போடு. நம்மக்கிட்ட காசு பணமில்லன்னாலும் நம்மக் கண்டா ஒரு பயம் இருக்குதுன்னா அதுக்கென்ன காரணம்.. படைபலம். படைபலம்என்று கட்சிப் பிரதிநிதி அறிவுறுத்துகிறார். தேசம் வலியுறுத்தும் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கு எதிரான வெறியான பிரச்சாரத்தை தணிக்கைத் துறை எப்படி அனுமதித்தது?

தமிழ் சினிமா என்றாலே இன்றைக்கு தேவர் சினிமா என்ற நிலைதான். இதற்கு முன்பு தேவர்களும், வெள்ளாள கவுண்டர்களுமே கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தனர். அதற்கும் முன்பு முதலியார், பிள்ளை, பார்ப்பனர் சாதிகளே தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்தப்பட்டு சாதி ஆதிக்கம் செலுத்தி வந்தன. கொங்கு மண்டலமும், தென் தமிழகமும் மட்டும்தான் தமிழகமா? ‘நாங்களும் இருக்கிறோம்என்று தமிழகத்தின் எஞ்சியுள்ள பகுதியினரோ, குறிப்பாக வட தமிழகமோ வெளிப்படையான சாதி அடையாளத்தோடு படமெடுக்க முன்வரவில்லை. இத்தனைக்கும் வட தமிழகத்தில் திரைத்துறையினர் ஏராளமாகவே உள்ளனர். அந்த வகையில் அட்டக்கத்திஎன்ற தன் முதல் படத்தின் மூலம் சென்னைப் புறநகர் மக்களின் வாழ்க்கையையும், மெட்ராஸ் படத்தின் மூலம் அசல் வட்டார மொழியுடன் சென்னை மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்தமைக்கு பாராட்டுகிறோம்.

சரி. வன்னியர் சினிமா என்று ஏதும் உள்ளதா? பாரதியின் இயக்கத்தில் வந்த மறுமலர்ச்சியும், தங்கர்பச்சானின் ஒருசில படங்களையும், இன்னும் சில படங்களையும் என அரிதாகவே தேடித்தேடி சொல்லிக் கொள்ளலாம்.

சென்னையில் பணிபுரியும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இங்கிருக்கும் சாதிகள், வட்டாரமொழி போன்றவை அழகிபடத்திற்குப் பிறகுதான் தெற்கே தெரியவந்தது என்கிறார். நாஞ்சில் நாடனின் கதையை தன் சொந்த மண்ணிற்கான, சாதிக்கான சினிமாவாக சொல்ல மறந்த கதை’-யில் மாற்றி யெடுத்த தங்கர்பச்சான், ஒன்பது ரூபாய் நோட்டு எடுத்த அதே தங்கர்பச்சான் இன்று முகநூலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். என்னவென்று? பெயரோடு சாதி அடையாளத்தைக் கொண்டவர்கள் யாரும் என்னுடன் நண்பராக இணையக்கூடாது என்று. ஒன்பது ரூபாய் நோட்டுக்குப் பிறகு வெளிவந்த படங்களிலும் வன்னியர் அடையாளம் எதுவும் முன்புபோல் தென்படவில்லை. எதனால் இந்த மாற்றம்? ஒருவேளை சொந்த சாதி மக்களால் சோர்வும், விரக்தியும் அடைந்து இப்படிச் சொல்கிறாரா? அப்படியும் ஒரு வாய்ப்பிருப்பதை மறுக்கமுடியாது.

ஏனெனில், மறுமலர்ச்சி பாரதி சிறுநீரகங்கள் செயலிழந்து மாற்று சிறுநீரகங்கள் பொருத்தப்பட வேண்டிய நிலையில் பணத்திற்காக சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஊடகங்களில் விளம்பரப் படுத்தப்பட்டபோது அவருக்கு பெரிய அளவில் உதவி கிடைத்துவிடவில்லை. வன்னியர் என்பதாலேயே வேட்பாளராகி, M.L.A.., M.P., அமைச்சர் என அதிகாரத்திற்கு வந்து, செல்வந்தர்களாகிய கோடீசுவரர்கள் எத்தனை பேர் பாரதிக்கு உதவ முன்வந்தனர்? ஆனால், பாரதியின் முயற்சியால் தமிழ் சினிமாவில் இடம் பெற்ற ராசு படையாட்சி பாடலை மட்டும் ஆளாளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆனால், மெட்ராஸ் படத்தை தலித்துகள் போற்றிக் கொண்டாடுகிறார்கள். எதிர்ப்புகளுக்கு கண்டனங்களைத் தெரிவிக்கிறார்கள். பாராட்டு விழா எடுத்து விருதுகளை வழங்குகிறார்கள். நாம் அவர்களைப் பார்த்து முன்னேற வேண்டிய, கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம் என்கிற உண்மையை முதலில் உணரவேண்டும். அவர்கள் சினிமாவை அவர்கள் எடுத்து விட்டார்கள். நம்முடைய சினிமாவை நாம் எப்போது எடுக்கப் போகிறோம். மதுரைய பத்திப்பேச விஷால், சசிகுமார்னு நிறைய பேரு இருக்காங்க. சென்னையப் பத்தி நாந்தானே பேசியாகனும்என்று முதல் குரல் கொடுத்த சென்னை நாயகன் சந்தானத்திற்கு இருக்கும் உணர்வு திரைத்துறையிலிருக்கும் நமது படைப்பாளிகளுக்கும் வரவேண்டும்.

தமிழ் சினிமாவில் இருக்கும் வன்னியர் படைப்பாளிகளுக்கு வாய்ப்புகளை அளித்து கை தூக்கிவிட வன்னியர் தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும். தாழ்வு மனப்பான்மையில் கிடக்கும் சாதிக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். தமிழ் சினிமாவில் நமக்கிருக்கும் மிகப்பெரும் வெற்றிடத்தை உடனடியாக நிரப்பியாக வேண்டும்.

வெளிப்படையாகவே தலித் வாழ்க்கையை சித்தரிக்கும் படம் தான் என்று சொல்லும் மெட்ராஸ் பட இயக்குநர் ‘‘எங்க ஊரு மெட்ராசு.. இதுக்கு நாங்கதானே அட்ரசு’’ என்று ஏகபோக உரிமையைக் கொண்டாடும் பாடல் வரிகளை பயன்படுத்துவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கப்போகிறோமா? சென்னப்ப நாயக்கரின் பெயரால் விளங்கும் சென்னைப் பட்டணம் உண்மையில் நம்முடையது என்பதை எப்போது நிலைநாட்டப் போகிறோம்?

அப்பாடக்கர்என்கிற சென்னை வட்டார கிண்டல் வழக்கு, பல்லாண்டுகளாகவே புழக்கத்தில் இருந்தாலும், சந்தானத்தின் மூலம் இன்று தமிழறிந்த எல்லா இடங்களிலும் பிரபலமாகியிருக்கிறது. அச்சு ஊடகங்களாலும், சிறுகதை, நாவல்களாலும் சாதிக்க முடியாத வெளிச்சத்தை சினிமா எனும் அதிசக்தி வாய்ந்த காட்சி ஊடகம் சாதித்துவிடும். சினிமாவில் வடதமிழகமும், அதன் அசலான வாழ்க்கையும் மனிதர்களும் சாதிகளும் கலாச்சாரமும் பதிவாக்கப்படவேண்டியது இன்றைய அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக